×

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்ஸ், பட்லர் அதிரடி பைனலில் நுழைந்தது இங்கிலாந்து: நாளை மறுநாள் பாகிஸ்தானுடன் மோதல்

அடிலெய்டு: ஆஸ்திரலேியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழத்தி முதல் அணியாக பாகிஸ்தான் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்நிலையில் 2வது அரையிறுதியில் நேற்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் களமிறங்கின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக டேவிட் மாலன், மார்க் வுட் ஆகியோருக்கு பதிலாக ஜோர்டன், சால்ட் ஆகியோர் இடம் பெற்றனர்.
அரையிறுதியில் இறங்கிய அதே இந்திய அணி நேற்று இங்கிலாந்தை எதிர்க் கொண்டது. ராகுல் வழக்கம் போல் 5, கேப்டன் ரோகித் 27(28பந்து, 4பவுண்டரி) ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 10பந்தில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் பெவிலியன் திரும்பினார். அப்போது இந்தியா 11.2ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 75ரன் எடுத்திருந்தது.

அதன் பிறகு கோஹ்லி, ஹர்திக் பாண்டியா இணை பொறுப்புடன் விளையாடி 4வது விக்கெட்டுக்கு 61 குவித்தது. கோஹ்லி 40பந்தில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் சரியாக அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஹர்திக் அதிரடியாக விளையாடி 29பந்துகளில் அரைசதம் விளாசினார். கடைசி ஓவரில் ரிஷப் பண்ட் 6ரன்னில்  ரன் அவுட்டானார். கடைசிப் பந்தை எதிர்கொண்ட ஹர்திக் அதை பவுண்டரிக்கு விரட்டி விட்டு திரும்ப, அவரது கால் ஸ்டெம்பில் பட்டது. அதனால் ‘ஹிட் விக்கெட்’ முறையில் அவர் ஆட்டமிழக்க, பந்து எல்லையை கடந்தும் பவுண்டரி கிடைக்காமல் போனது. அதனால் இந்தியா 20ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168ரன் எடுத்தது. ஹர்திக்  33 பந்துகளில் 4பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 63ரன் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் 3, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதனையடுத்து 169 எடுத்தால் பைனலுக்கு செல்லலாம் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அதற்கு ஏற்ப தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பட்லர், அலெக்ஸ் ஹலேஸ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். அவர்களை பிரிக்க முயன்ற இந்திய வீரர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. அலெக்ஸ் 29 பந்துகளிலும், பட்லர் 36பந்துகளிலும் அரைசதம் விளாசினர். அதிரடி ஆட்டம் காரணமாக 16வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 170 ரன் என இலக்கை கடந்தனர். எனவே இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை அதிரடியாக வீழ்த்தி 3வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. பட்லர் 80(49பந்து, 9பவுண்டரி, 3சிக்சர்), அலெக்ஸ் 86(47பந்து, 4பவுண்டரி, 7சிக்சர்)ரன் விளாசினர். அதிக எதிர்பார்ப்புடன் களம் கண்டு,  பேட்டிங்கில் சுமாராகவும், பந்துவீச்சில் ரொம்ப சுமாராகவும் விளையாடியதால் பரிதாபமாக தோற்ற இந்தியா அணி இன்று நாடு திரும்புகிறது. இங்கிலாந்து அணி நவ.13ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

* டி20 உலக கோப்பைகளில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் பட்லர்-அலெக்ஸ் இணை முதல் இடத்தை பிடித்துள்ளது.
* டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த 2வது ஜோடி என்ற பெருமையும் இந்த இணைக்கு கிடைத்துள்ளது. முதல் இடத்தில் தெ.ஆப்ரிக்காவின் டிகாக்-மில்லர்(174*ரன், கவுகாத்தி) இணை உள்ளது.
* டி20 ஆட்டங்களில் விக்கெட் இழப்பின்றி அதிக இலக்கை எட்டிய இணைகளில் பட்டியலில் இங்கிலாந்து ஜோடி(169*) 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில்  இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் ஜோடி(200*), 2வது இடத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து ஜோடி(170*) உள்ளன.
* இந்த தொடரில் முதல் முறையாக தனது முதல் ஓவரில் 13ரன்னை புவனேஸ்வர் குமார் வாரி வழங்கியுள்ளார். நடப்புத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ரன், நெதர்லாந்துக்கு எதிராக 0, தென் ஆப்ரிக்காவுக் கு எதிராக 3, வங்க தேசத்துக்கு எதிராக 2 ரன், ஜிம்பாப்வேவுக்கு எதிராக 0 ரன்னுடன் விக்கெட் எடுத்து அசத்தினார்.
* உலக கோப்பை டி20 அரையிறுதிகளில் விளையாடிய போது கோஹ்லி  முறையே தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 72*(2014), வங்கதேசத்துக்கு எதிராக 89*(2016), இங்கிலாந்துக்கு எதிராக 50(2022) ரன் விளாசியுள்ளார்.
* சூப்பர் 12 சுற்று முதல் அரையிறுதி வரை அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கோஹ்லி  முதலிடத்தில் உள்ளார். அவர் 296ரன் குவித்துள்ளார். இரண்டவது இடத்தில் உள்ள சூரியகுமார் 239ரன் எடுத்துள்ளார். நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் 201ரன்னுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
* பவர் பிளேயில் இந்தியாவிடம் அதிக ரன் அள்ளிய அணிகளில் இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 6 ஓவரில் 63/0ரன் எடுத்துள்ளது. வங்கதேசம் 60/0ரன் குவித்து 2வது இடத்தில் உள்ளது. இந்த 2 ஆட்டங்களும் அடிலெய்டில் நடந்தது. மற்ற அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா 32ரன்னுக்கு மேல் விட்டு தந்ததில்லை. கூடவே 2 முதல் 3 விக்கெட்களையும் இந்தியா அள்ளியுள்ளது.
* டி20 ஆட்டங்களில் 4000ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை  வீராத் கோஹ்லி பெற்றுள்ளார். அவர் நேற்று வரை 4008 ரன் எடுத்துள்ளார்.

Tags : Alex ,Buttler ,India England ,Pakistan , Alex, Buttler enter action final against India England: Clash with Pakistan the day after tomorrow
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து